மீட்பு உபகரணங்களுடன் 274 தீயணைப்பு வீரர்கள் தயார்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு உபகரணங்களுடன் 274 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

Update: 2022-12-08 18:45 GMT

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்க மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி கடலூர் மாவட்ட தீயணைப்பு வீரர்களும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். நேற்று கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்ததை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

274 தீயணைப்பு வீரர்கள்

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் அலுவலர்கள் உள்பட 274 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர 300 தன்னார்வலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 25 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. 4 மீட்பு படகுகள், பாதுகாப்பு கவச உடைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், கயிறு, ஜெனரேட்டர் மூலம் இயங்கும் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களுடன் மீட்பு பணிக்கு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் கடலூரில் 25 குழுக்கள், சிதம்பரத்தில் 20 குழுக்கள், விருத்தாசலத்தில் 20 குழுக்கள் என 65 குழுக்களாக பிரித்து தயார் நிலையில் வைத்துள்ளோம். மழை வெள்ளம் பாதித்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்