இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் 27 கிலோ தங்க நகைகள் வங்கியில் முதலீடு

வங்கியில் முதலீடு செய்த கோவிலின் 27 கிலோ தங்க நகை முதலீட்டு பத்திரத்தை கோவில் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2022-06-15 08:19 GMT

சென்னை:

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 27 கிலோ தங்க நகைகள் உருக்கப்பட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. இந்த முதலீட்டு பத்திரத்தை கோவில் நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களில் காணிக்கையாக வரப்பெற்ற தங்க அணிகலன்களை உருக்கி வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இந்த பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர். மாலா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 27 கிலோ 250 கிராம் எடையுள்ள தங்க அணிகலன்கள் மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு எடுத்து சென்று, அதனை உருக்கி சுத்த தங்க கட்டிகளாக மாற்றும் பொருட்டு சாத்தூர் கிளை ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி, அந்த தங்க அணிகலன்கள் சுத்த தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பை ஸ்டேட் வங்கியின் தங்க நகை கிளையில் 29.4.2022 அன்று நிரந்தர முதலீடு செய்யப்பட்டது.

அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட சுத்த தங்கக்கட்டிகளின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். இதன் மூலம் ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் வட்டித் தொகையாக கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித்தொகை கோவில் திருப்பணி மற்றும் வளர்ச்சிப்பணிக்கு பயன்படுத்தப்படும்.

இந்த தங்க முதலீட்டு பத்திரத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மாலா, இந்து அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்