சிறுமியை கர்ப்பமாக்கியவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை

தஞ்சை அருகே சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி, அவரை கர்ப்பமாக்கிய உறவினருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-09-27 20:25 GMT

தஞ்சையை அடுத்த வாண்டையார் இருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 43). இவர், கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது தூரத்து உறவினரான 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அவரிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்தார். மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதோடு, தொடர்ந்து அந்த சிறுமியை மிரட்டியும், தனியாக வெளியே அழைத்துச்சென்றும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கர்ப்பம் அடைந்தார்

இதனால் வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்ட சிறுமியை அவரது தாயார் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது, அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இதைக்கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த சிறுமி தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கருக்கலைப்பு செய்யப்பட்டது. மேலும், மரபணு சோதனையில் அந்த சிறுமியின் கர்ப்பத்துக்கு ரவிச்சந்திரன்தான் காரணம் என தெரிய வந்தது.

25 ஆண்டுகள் சிறை தண்டனை

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார். புகாரின் பேரில் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த கலைவாணி வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தார். இதுதொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரித்து, ரவிச்சந்திரனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்