வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவர்கள் மயக்கம்:அரசு பள்ளியில் சப்-கலெக்டர் பிரியங்கா ஆய்வு-பரிசோதனை முடிவு வந்ததும் உரிய நடவடிக்கை

வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ-மாணவிகள் மயக்கம் அடைந்ததைத்தொடர்ந்து அந்தப்பள்ளியில் சப்-கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்தார். அப்போது ஆய்வக பரிசோதனை முடிவு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Update: 2023-04-28 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ-மாணவிகள் மயக்கம் அடைந்ததைத்தொடர்ந்து அந்தப்பள்ளியில் சப்-கலெக்டர் பிரியங்கா ஆய்வு செய்தார். அப்போது ஆய்வக பரிசோதனை முடிவு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

24 மாணவர்கள் மயக்கம்

வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 24 மாணவ-மாணவிகளுக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை முடிந்து 16 பேர் வீடு திரும்பினர். 8 மாணவ-மாணவிகள் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளார்கள். இந்த நிலையில் பொள்ளாச்சி சப் கலெக்டர் பிரியங்கா, கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) உமாமகேஸ்வரி ஆகியோர் பள்ளிக்கு சென்று சத்துணவு மையம், குடி தண்ணீர் தொட்டி, பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வக பரிசோதனை

பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, சத்துணவு அமைப்பாளர் வனஜா ஆகியோரிடம் நடந்தவைகள் குறித்து கேட்டறிந்தார்.நேற்று முன் தினம் சத்துணவு சமைப்பதற்கு பயன்படுத்திய உணவுப் பொருட்கள் மற்றும் குடிதண்ணீர் ஆகியவைகளையும் ஆய்வு செய்தார். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் மாணவ -மாணவிகளிடமும் நேற்று பள்ளிக்கு வந்திருந்த 17 மாணவ-மாணவிகளிடமும் பொள்ளாச்சி சப் கலெக்டர் பிரியங்கா நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கேட்டார். சத்துணவு சமைப்பதற்கு பயன்படுத்திய உணவுப் பொருட்கள், குடிதண்ணீர் ஆகியவைகளை கோவையில் உள்ள உணவுப் பொருட்கள் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், 72 மணி நேரத்திற்கு பிறகு ஆய்வக பரிசோதனை முடிவு தெரிந்த பிறகு அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் பிரியங்கா கூறினார்.

சுகாதாரமான குடிநீர் வினியோகம்

இதனைத் தொடர்ந்து வால்பாறை நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற சப் -கலெக்டர் பிரியங்கா நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைவிழா கொண்டாடுவது குறித்து உரிய ஆலோசனை கூட்டங்கள் நடத்தி முன் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது அவருடன் தாசில்தார் ஜோதிபாசு, கோவை மாவட்ட நோய் தடுப்பு அதிகாரி மோபி, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் (பொ) டாக்டர் ஆனந்தன், வட்டார கல்வி அலுவலர்கள் வெள்ளிங்கிரி, பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்