நாடு திரும்பிய 23 தமிழக மீனவர்கள் - சால்வை அணிவித்து பா.ஜ.க.வினர் வரவேற்பு

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 23 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர். அவர்களை பா.ஜ.க.வினர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Update: 2022-07-22 13:57 GMT

ஆலந்தூர்,

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை ராணுவம் கடந்த 3-ந் தேதி மீனவர்களை கைது செய்தது.

தமிழக அரசு கோரிக்கையால் மத்திய அரசின் உதவியுடன் இலங்கை சிறையில் இருந்து 23 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அனுப்பி வைத்தனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த 23 மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

சென்னை வந்த மீனவர்களை தமிழக பா.ஜ.க. மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி, தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்