முழுவீச்சில் தயாராகும் 23 அறுவை சிகிச்சை அரங்கங்கள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முழுவீச்சில் தயாராகி வரும் 23 அறுவை சிகிச்சை வளாகத்திற்கான கட்டுமான பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இந்த வளாகம் கலைஞர் பிறந்தநாளான, ஜூன் மாதம் 3-ந்தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Update: 2023-04-06 19:28 GMT

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முழுவீச்சில் தயாராகி வரும் 23 அறுவை சிகிச்சை வளாகத்திற்கான கட்டுமான பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இந்த வளாகம் கலைஞர் பிறந்தநாளான, ஜூன் மாதம் 3-ந்தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரை அரசு ஆஸ்பத்திரி

தென் மாவட்ட மக்களின் முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுபோல், ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே முழு வீச்சில் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் 7 உயிர்காக்கும் நவீன பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.

அறுவை சிகிச்சை வளாகம்

இந்த நிலையில், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே இயங்கி வந்த அறுவைச்சிகிச்சைக்கூடம் பழமையானது, என்பதால் அதனை அப்புறப்படுத்தி விட்டு தற்போது அந்த இடத்தில் புதிதாக ஜப்பான் நாட்டின் நிதிஉதவியுடன் ஒருங்கிணைந்த புதிய அறுவைச்சிகிச்சை வளாகம் (காம்ப்ளக்ஸ்) அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

அதாவது, கட்டிடத்தின் பெரும்பாலான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து, முகப்பு பகுதியில் அழகுபடுத்தும் பணிகள் நடக்கிறது. இதுபோல், உள்வளாக பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

அறுவை சிகிச்சை வளாகம் தரை தளத்துடன் சேர்த்து 7 தளங்கள் கொண்டது. 23 அறுவைச்சிகிச்சை அரங்குகள் அமைகிறது. கட்டிட பணிகளுக்காக மட்டும் ரூ.121 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்களும் ரூ.100 கோடிக்கும் மேல் செலவிடப்பட இருக்கிறது. அறுவை சிகிச்சை அரங்கங்கள் மட்டுமின்றி நோயாளிகளின் வசதிக்காக 3 தளங்களில் சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோல், பல்வேறு சிறப்பு வசதிகளும் இதில் இடம் பெறுகிறது.

ஜூன் 3-ந்தேதி திறப்பு?

31-5-2023 அன்று இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினர் கையில் ஒப்படைக்கப்பட்டு, தளங்கள் வாரியாக, மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்படும்.

மதுரையில் ஜூன் 3-ந்தேதி முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளில் கலைஞர் நூலகத்திற்கான திறப்பு விழா நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் மதுரைக்கு வருகை தரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை வளாகத்தையும் திறந்து வைக்க வாய்ப்புகள் உள்ளன. அதற்கு ஏற்றார்போல், இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்

Tags:    

மேலும் செய்திகள்