ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டில் 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை,
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ரேஷன் கடை விற்பனையாளர்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கில்லனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது 53), ரேஷன் கடை விற்பனையாளர். இவரது மனைவி விஜயலட்சுமி, சத்துணவு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ராஜகோபால் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி ராஜகோபாலுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதனால் அவர் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
வலைவீச்சு
தொடர்ந்து பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 22 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உதை்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தொியவந்தது.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் ரேஷன் கடை விற்பனையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.