மணப்பாறை:
ஜல்லிக்கட்டு
மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டை பழனியாண்டி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளையும், உள்ளூர் காளைகளும் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடர்ந்து திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, அரியலூர், கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள், ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றுக்கு 25 பேர் வீதம் களம் இறக்கப்பட்டனர். இதில் காளைகளுடன் வீரர்கள் மல்லுக்கட்டி, அவற்றை அடக்கினர். அடக்க வந்த வீரர்களையும், திமிலை பிடித்த வீரர்களையும் காளைகள் முட்டித்தூக்கி வீசி பந்தாடின. சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. இருப்பினும் காளைகளின் திமிலை வீரர்கள் லாவகமாக பிடித்து அடக்கினர். இவற்றை கண்டு பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர்.
21 பேர் காயம்
வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், அண்டா, மின்விசிறி, குக்கர், மிக்சி, கிரைண்டர், ரொக்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் 666 காளைகளும், 225 வீரர்களும் களம் கண்டனர்.
காளைகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் சுமார் 50-க்கும் மேற்பட்ட காளைகள் இருந்ததால், அவை களம் காண முடியாத நிலை ஏற்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டது.