குற்றவாளிகள் நிரபராதி அல்ல என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் - கே.எஸ்.அழகிரி

குற்றவாளிகள் நிரபராதி அல்ல என்பதை நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-18 08:56 GMT
கோப்புப்படம்
சென்னை, 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அதன்படி பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் தீர்ப்பை வாசித்தனர்.

அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.  மேலும் மாநில அரசு முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. 

இந்த சூழலில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளிகள் கொலைக்காரர்கள் என்பதையும் , அவர்கள் நிரபராதி அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை சுப்ரீம்கோர்ட் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே சுப்ரீம்கோர்ட் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்” என்று அதில் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகள்