ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

ரெயில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்ததை தொடர்ந்து ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Update: 2022-05-07 14:10 GMT
ரெயில் தண்டவாளத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்ததை தொடர்ந்து ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
வெடிகுண்டுகள் பறிமுதல்
புதுவை காாரமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளி பின்புறம் ரெயில்வே தண்டவாள பகுதியில் கடந்த 5-ந்தேதி இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக சின்ன கொசப்பாளையம் முத்துமாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் ரிஷி (வயது 22), பெரியார்நகரை சேர்ந்த கவுதம், அரவிந்த், கவியரசன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் வெடிக்காத 5 நாட்டு வெடிகுண்டுகளை   போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிரடி சோதனை
புதுச்சேரியில் எதிரிகளை பழிவாங்க சமீப காலமாக நாட்டு வெடிகுண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, ரமேஷ் மற்றும் போலீசார் ரோடியர்பேட், ஆட்டுப்பட்டி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 
எச்சரிக்கை
அப்போது அவர்களது வீடுகளில் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். மேலும் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள ரவுடிகள் உள்ளனரா? என்றும் கண்காணித்தனர்.
தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் இந்த சோதனையில் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்