கடலூர்: ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் திடீர் தர்ணா - போலீசார் பேச்சுவார்த்தை...!
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் ஆட்டோ டிரைவர்கள் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கத்தை சேர்ந்த 53 டிரைவர்கள் இன்று சங்க தலைவர் சிவா தலைமையில், தங்களது குடும்பத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி விரைந்து வந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத டிரைவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், உங்கள் பிரச்சினை தொடர்பாக புகார் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன்பேரில் ஆட்டோ டிரைவர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் என்ற பெயரில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், பெரியார் அரசு கலைக்கல்லூரி, பாக்குமரச்சாலை பிள்ளையார்கோவில் ஆகிய இடங்களில் ஆட்டோ நிறுத்தம் எண் 11-ஐ நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தோம்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு 11- வது எண் ஆட்டோ நிறுத்தத்தை தாங்கள் தான் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், நாங்கள் அங்கே ஆட்டோக்களை நிறுத்தக் கூடாது என்று கூறி எங்களுடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் நிறுத்தி வந்த ஆட்டோ நிறுத்தத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு, இது தொடர்பாக கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆட்டோ டிரைவர்கள் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.