காடுகளின் அளவு 6 சதவீதமாக குறைந்துள்ளது சபாநாயகர் செல்வம் வேதனை
புதுச்சேரியில் காடுகளின் அளவு 6 சதவீதமாக குறைந்துள்ளது என்று சபாநாயகர் செல்வம் வேதனையுடன் தெரிவித்தார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் காடுகளின் அளவு 6 சதவீதமாக குறைந்துள்ளது என்று சபாநாயகர் செல்வம் வேதனையுடன் தெரிவித்தார்.
2 நாள் கருத்தரங்கு
புதுவை காலநிலை மாற்றப்பிரிவு, புதுச்சேரி சுற்றுச்சூழல் தகவல் மையம், எரிசக்தி மற்றும் வள நிறுவனம் இணைந்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி திட்டத்தில் காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கை சன்வே ஓட்டலில் நடத்துகின்றன.
இதன் தொடக்க விழா நடந்தது. அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
அப்போது சபாநாயகர் செல்வம் பேசியதாவது:-
காடுகள் அழிப்பு
புதுவை மாநிலத்தின் பரப்பளவில் 30 சதவீதம் காடுகள் இருந்தன. ஆனால் தற்போது காடுகளின் அளவு 6 சதவீதமாக குறைந்துள்ளது. 24 சதவீத காடுகள் அழிந்து போயுள்ளன.
இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாகிஸ்தானில் 118 டிகிரி வெயில் கொளுத்துகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வேலூரில் 108 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
ஆக்சிஜன் அளவு குறைந்தது
கொரோனா மக்களுக்கு பெருமளவு பாதிப்பை தந்த நிலையிலும் ஒரு சில நன்மைகள் நடந்துள்ளன. ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன. புதுவையிலும் காற்றில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது. இதற்கு காடுகளை அழித்தது தான் காரணம்.
புதுவையில் வழங்கப்படும் தண்ணீரில் உப்பு, இரும்பு, அமிலத்தன்மை அதிகரித்துள்ளது. எனவே மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளவர்கள் ஆராய்ச்சிகள் நடத்தி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் பேசினார்.
துணைவேந்தர் மோகன்
புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் பேசியதாவது:-
வளர்ச்சியடையும் நாடுகளில் இருந்து கரியமிலவாயு அதிகளவு வெளிப்படுத்தப்படுகிறது. இதனால் பிற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் இது 6 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரியில் பெரிய வாய்க்கால் உள்ளது. அது மழை நீரை வெளியேற்ற உருவாக்கப்பட்டது தான். ஆனால் அந்த வாய்க்காலில் நாம் கழிவுநீரை வெளியிடுகிறோம். வருங்காலத்தில் பெரிய வாய்க்கால் கூவமாக மாறாமல் தடுக்க வேண்டும்.
மரம் நட வேண்டும்
தண்ணீரில் நாம் 65 சதவீதத்தை வீணாக்குகிறோம். அதை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீர் ஒரு மீட்டர் குறைந்தால் 40 மீட்டர் நீளத்துக்கு கடல்நீர் உள்ளே வரும். எனவே கடல்நீர் உள்ளே வராமல் தடுக்க நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவேண்டும்.
புதுவையில் உள்ள மரங்களின் எண்ணிக்கை போதுமானதல்ல. இன்னும் அதிகமான மரங்களை நாம் நடவேண்டும். 10 மரங்கள் வேண்டுமென்றால் 100 மரங்களை நடவேண்டும். அவ்வாறு நட்டால் தான் நமக்கு போதுமான அளவுக்கு ஆக்சிஜன் கிடைக்கும்.
இவ்வாறு துணைவேந்தர் மோகன் பேசினார்.
நிகழ்ச்சியில் சம்பத் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் துறையின் முதுநிலை என்ஜினீயர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
-------