சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 171 ஆக உயர்வு

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளது.

Update: 2022-04-28 07:59 GMT



சென்னை,



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.  சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 4,974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் 2,729 மாதிரிகளின் முடிவுகள் தெரிய வந்துள்ளன.

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் கடந்த 26ந்தேதி 32 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இதனால், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் 27ந்தேதி (நேற்று) புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதன் மூலம் ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழக சுகாதார செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.  அதே சமயம் சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவர் தொடர்ந்து கூறும்போது, சென்னை ஐ.ஐ.டி.யில் நாளைக்குள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  சென்னை ஐ.ஐ.டி.யில் நாளை முதல் குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்