தஞ்சை தேர் திருவிழா விபத்து: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு..!

தஞ்சை தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

Update: 2022-04-27 03:41 GMT
கோப்புப் படம்
சென்னை,

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் திருத்தேர் வந்தபோது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. 

இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தேர் திருவிழா விபத்து நடந்த தஞ்சை களிமேடு கிராமத்துக்கு இன்று காலை 11 மணியளவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை தேர் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர் திருவிழா விபத்தில் 11 பேர் உயிரிழந்த துயர செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்