1½ ஆண்டுகளாக கோடநாடு கொலை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம்

கோடநாடு கொலை வழக்கை விசாரித்து வந்த ஊட்டி கோர்ட்டு நீதிபதி சி.சஞ்சய்பாபா, தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Update: 2022-04-26 23:54 GMT
சென்னை,

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட முதன்மை நீதிபதிகள், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் என்று 53 பேரை சென்னை ஐகோர்ட்டு பல்வேறு கோர்ட்டுகளுக்கு இடமாறுதல் செய்துள்ளது. இதில், சுமார் 1½ ஆண்டுகளாக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த ஊட்டி கோர்ட்டு நீதிபதி சி.சஞ்சய்பாபா, தேனி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

சென்னை தொழிற்சாலை தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.முருகன், கோடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீதிபதி பி.முருகன்

சேலம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.குமரகுரு, நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கும், கோவை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி ஆர்.சக்திவேல், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கும், விருதுநகர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி ஏ.கந்தகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நிரந்தர லோக் அதலாத் தலைவராகவும், சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.ஜோதிராமன், சென்னை முதலாவது தொழிலாளர் கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை தொழிற்சாலை தீர்ப்பாயத்தின் நீதிபதி பி.முருகன், ஊட்டி மாவட்ட செசன்சு மற்றும் தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியாகவும், தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி கே.ராஜசேகர், கோவை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி ஏ.நசீர்அகமது

நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீர் அகமது, தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிபதி ஆர்.கலைமதி, சேலம் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதியாகவும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி சி.திருமகள், சென்னை அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம், கரூர் மாவட்ட நீதிபதியாகவும், திண்டுக்கல் முதன்மை நீதிபதி எம்.கே.ஜமுனா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், கரூர் மாவட்ட நீதிபதி எம்.கிறிஸ்டோபர், விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நீதிபதி சி.சஞ்சய்பாபா

தேனி மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதி கே.தனசேகரன், சென்னை 8-வது கூடுதல் செசன்சு (சி.பி.ஐ.) கோர்ட்டு நீதிபதியாகவும், ஊட்டி மாவட்ட நீதிபதி மற்றும் தலைமை மாஜிஸ்திரேட்டு சி.சஞ்சய்பாபா, தேனி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னை 8-வது சி.பி.ஐ., கோர்ட்டு நீதிபதி என்.வேங்கடவரதன், ஐகோர்ட்டு மதுரை கிளை ஜூடிசியல் பதிவாளராகவும், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.சுமதி, சேலம் தொழிலாளர் கோர்ட்டு நீதிபதியாகவும், கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு நீதிபதி வி.ஆர்.லதா, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், புதுக்கோட்டை அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஆர்.குருமூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

53 நீதிபதிகள்

சென்னை அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஏ.டி.மரியா கிளீட்டா, சென்னை போக்குவரத்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி வி:வி.தனியரசு, திருச்சி குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், ஐகோர்ட்டு மதுரை கிளை ஜூடிசியல் பதிவாளர் கே.பூர்ண ஜெய ஆனந்த், ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், மாநில மனித உரிமை ஆணைய பதிவாளர் ஜி.கருணாநிதி, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் உள்பட மொத்தம் 53 நீதிபதிகள் பல்வேறு கோர்ட்டுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்