ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்த 3 பேர் கைது - போலீசார் விசாரணை
சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம்மில் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் தனியார் வங்கியுடன் கூடிய ஏடிஎம் மையம் உள்ளது. டெபாசிட் செய்யும் வசதியுடைய ஏடிஎம் என்பதால், கடந்த 11ஆம் தேதி, 14 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான புகாரில், கள்ளநோட்டுகளை டெபாசிட் செய்த பரங்கிமலையை சேர்ந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், அம்பத்தூரை சேர்ந்த அமர்நாத் என்பவர் கள்ள நோட்டுகளை கொடுத்து டெபாசிட் செய்ய கூறியது தெரியவந்தது. இதைடுத்து, அமர்நாத்திடம் நடத்திய விசாரணையில் ஆலந்துரை சேர்ந்த மெகதாப் அலி மற்றும் புதுப்பேட்டையை சேர்ந்த நஜிமுத்தீன் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மெகதாப் அலி, அமர்நாத் மற்றும் நஜிமுத்தீனை கைது செய்த போலீசார், 20 ஆயிரம் கள்ள நோட்டை பறிமுதல் செய்து, முக்கிய புள்ளிகளை தேடி வருகின்றனர்.