மதவெறியை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி

தமிழகம், புதுச்சேரியில் மதவெறியை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்வதாக திருமாவளவன் எம்.பி.கூறினார்.

Update: 2022-04-20 17:45 GMT
தமிழகம், புதுச்சேரியில் மதவெறியை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி செய்வதாக திருமாவளவன் எம்.பி.கூறினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
காரைக்கால் நிரவியில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலச்சங்கத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காரைக்கால்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
விழாவிற்கு நலச்சங்கத்தின் தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, ஓ.என்.ஜி.சி. காவிரிப்படுகை மேலாளர் அனுராக் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம்
இதைத்தொடர்ந்து திருமாவளவன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். அதேசமயம், ஏற்கெனவே அமைக்கப்பட்ட எண்ணெய் கிணறுகளை தொடர்ந்து இயக்க அவர்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் தமிழக கவர்னர் வரும்போது அவர் காரில் சிலர் கருப்பு கொடியை வீசியதாக பா.ஜ.க. வினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் போலீசார், கவர்னர் போனபிறகு, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் நடந்த வாக்குவாதத்தில் தான் கருப்புக்கொடி வீசப்பட்டதாக உண்மையை விளக்கியுள்ளனர்.
இளையராஜா பிரதமர் மோடியை வாழ்த்தி பேசுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஆனால் நேர் எதிர் கருத்துள்ள அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிடுவது முறையற்றதும், தீங்கானதும் கூட. அண்மை காலமாக அம்பேத்கர் பெயரை பா.ஜ.க.வினர் தங்களுடைய ஆதாயத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
குறுக்கு வழியில் ஆட்சி
சங்பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர், தமிழகம், புதுச்சேரியில் மதவெறி, மதவெறுப்புகளை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க.வினர் சூதும், சூழ்ச்சியையும் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி குறுக்குவழியில் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
புதுச்சேரியிலும் அதுபோன்ற ஒரு முயற்சி நடக்கிறது. மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சங்பரிவார், பா.ஜ.க.விடம் தமிழக-புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்