மதத்தால், மொழியால் பிரிந்திருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் கவர்னர் பேச்சு

மதத்தால், மொழியால் பிரிந்து இருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

Update: 2022-04-19 20:48 GMT
மயிலாடுதுறை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து காரில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றார். அங்கு தருமபுர ஆதீனம் வாசலில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அருங்காட்சியகம் திறப்பு

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை கவர்னர் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். கவர்னருக்கு தருமபுரம் ஆதீனம், நடராஜர் உருவச்சிலையை வழங்கினார்.

இதனையடுத்து தருமபுரம் ஆதீனத்தில் தமிழர்களின் பழமையை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பழங்கால அருங்காட்சியகத்தை கவர்னர் திறந்து வைத்ததுடன், பவளவிழா அரங்கத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

பின்னர் நடந்த விழாவில் கவர்னர் பேசியதாவது:-

அனைவருக்கும் ஒரே கடவுள் சிவன்

உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடுகள், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள். இதற்கு நாகரீகம், கலாசாரம், கல்வி, நீதிபோதனைகள், பண்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே நலவழிப்படுத்தி தீர்வு காணமுடியும்.

இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன். மதத்தால், மொழியால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம்தான். இந்தியாவினுடைய ஆன்மிகம் தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

2 சூரியன்கள்

முன்னதாக தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் பேசியதாவது:-

தமிழக கவர்னரின் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன். ஆளுகிற ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால், தமிழகத்தில் 2 சூரியன்கள் இருக்கின்றன. இதனால் தமிழகம் பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

யாத்திரையை தொடங்கி வைத்தார்

இதனைத்தொடர்ந்து தருமபுர ஆதீனம், தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக மேற்கொண்ட ஞானரத யாத்திரையை கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறைக்கு கவர்னர் வருகையை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் 1,850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்