சென்னை விமான நிலையத்தில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 81 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பேட்டரி கார் டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

Update: 2022-04-18 18:55 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த ரகுமான் உசேன் (வயது 35) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் இருந்த செல்போன் மற்றும் மின்சாதன பொருட்களை பிரித்து பார்த்தனர். அதில் தங்கத்தை துண்டு துண்டாக வெட்டி மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்புள்ள 606 கிராம் தங்கம் மற்றும் மின்சாதன பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரு கிலோ தங்கம் பறிமுதல்

மேலும் கொழும்பில் இருந்து சென்னை வந்த பயணி ஒருவர், விமான நிலையத்தில் பேட்டரி கார் ஒட்டும் டிரைவர் ஒருவரிடம் ஏதோ பொருள் தருவதை கண்காணிப்பு கேமராவில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்டனர். உடனே அந்த பேட்டரி கார் டிரைவர் மோகன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது பயணி ஒருவர், தன்னிடம் ஒரு பார்சலை கொடுத்து அதனை வெளியே கொண்டு வந்து தரும்படி கூறியதாக சொன்னார். அவரிடம் இருந்த பார்சலை வாங்கி பிரித்து பர்த்த போது அதில் தங்கம் இருந்தது. கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள 475 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜா, கொழும்பு ஆகிய நகரங்களில் இருந்து சென்னை கடத்தி வந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 81 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பேட்டரி கார் டிரைவர் மோகன், பயணி ரகுமான் உசேன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்