கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.விடம் 6 மணி நேரம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியிடம் கோவையில் தனிப்படை போலீஸ் அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

Update: 2022-04-16 00:06 GMT
கோவை,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.

இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஆறுக்குட்டிக்கு சம்மன்

டிரைவர் கனகராஜ், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்னர் கோவையை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியிடம் 1½ ஆண்டு டிரைவராக வேலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த வழக்கில் ஆறுக்குட்டியிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு வி.சி.ஆறுக்குட்டிக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

6 மணி நேரம் விசாரணை

இதன்படி நேற்று கோவை பி.ஆர்.எஸ். போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள தனி அறையில் விசாரணைக்காக வி.சி.ஆறுக்குட்டி காலை 11½ மணிக்கு ஆஜர் ஆனார். அவரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் தனிப்படை போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

டிரைவர் கனகராஜின் மரணம் தொடர்பாக தெரிந்த விவரங்களை அளிக்குமாறு ஆறுக்குட்டியிடம் போலீஸ் அதிகாரிகள் கேட்டு உள்ளனர்.

தன்னிடம் கார் டிரைவராக வேலை பார்த்தது தொடர்பான விவரங்களை ஆறுக்குட்டி கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து மாலை 5½ மணி வரை அவரிடம் விசாரணை நீடித்தது. அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்