ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் - அமைச்சர் நாசர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் இனி ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார்.
சென்னை,
சட்டப்பேரவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-
பால் வளத்துறையில் பத்தாண்டுகளாக முடக்கி வைக்கப்பட்ட வாணிபம் இப்போது தலைதூக்கி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு மட்டும் ரூ.87 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தரம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
தரம் என்றால் அது ஆவின் தான். தமிழ்நாட்டில் இனி ரேசன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படும். அதைபோல நுகர்வோர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு புதிய பத்து வகையான பால் பொருட்களை அறிமுகப்படுத்தபடும்.
தொடக்க பால் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம், பணி வழங்குவது போன்ற பல தரப்பட்ட கோரிக்கைகளை பரீசிலனை செய்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்படும்.
தமிழ்வழிக் கல்வியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பால் உற்பத்தியாளர்களின் வாரிசுகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.