தமிழகத்தில் இந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது - ஆ.ராசா எம்.பி பேச்சு...!
தமிழகத்தில் இந்தியை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி தெரிவித்து உள்ளார்.
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அண்ணா திடலில் மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிக்கு நன்றி தெரிவித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தி.மு.க ஆட்சிக்கு வந்த முதலிலேயே மிகப்பெரிய சவால்களை சந்தித்தது. கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காலகட்டத்தில் மருத்துவர்கள் கூட நோயாளிகளின் அருகில் செல்ல பயந்த நேரத்தில் தமிழக முதல்வர் மிகச் சிறப்பாக செயலாற்றி நோயாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாற்றி காட்டினார்.
அதன் பின்னர் கனமழையால் சென்னை மூழ்கிய நேரத்தில் இரவு பகல் பாராமல் பணிசெய்து தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தினார்.
அ.தி.மு.க ஆட்சியில் தமிழக மக்கள் மீது மிகப்பெரிய கடன் சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டனர். தமிழக அரசின் மிகச்சிறந்த திட்டங்களால் தமிழகம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கட்டாயம் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
தமிழகத்தில் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தமிழக மக்களும் அதனை ஏற்க மாட்டார்கள். ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை அனைவரும் கற்க வேண்டும் என உள்துறை மந்திரி அமித்ஷா பேசியது கண்டனத்துக்குரியது.
தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்கலிலும் இதனை எதிர்க்கின்றனர். இந்திதான் ஏக மொழி என்று சொன்னால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்க வேண்டுமா என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்பும். இந்தியை தமிழகத்தில் கொண்டு வர முயற்சித்தால் தமிழகம் தனி நாடாகும் என்பதில் மாற்றமில்லை.
மொழியால் நாடு பிரிந்தது என்ற வரலாறு உண்டு. அதை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.