சொத்துவரி உயர்வு போல மின்தடைக்கும் மத்திய அரசுதான் காரணம் என்பதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சொத்துவரி உயர்வு போல மின்தடைக்கும் மத்திய அரசுதான் காரணம் என்று சொல்வது தவறு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-07 20:50 GMT
சென்னை,

நிலக்கரி, பெட்ரோல், டீசல், உரங்கள், எரிவாயு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவற்றின் இருப்பை கண்காணிப்பது, தேவைக்கேற்ப அவற்றை மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறுவது, அவ்வாறு பெற முடியவில்லை என்றால், அவற்றை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்பது ஆகியவை மாநில அரசின் இன்றியமையாத கடமையாகும். ஆனால், இந்த பொறுப்பை உணராமல், வெற்றி என்றால் அதற்கு தி.மு.க.தான் காரணம் என்றும், பிரச்சினை என்றால் பிறர் மீது பழி போடுவதும் தி.மு.க.வுக்கு வாடிக்கையாகி விட்டது.

உதாரணமாக, கொரோனா தடுப்பூசியை இலவசமாக போடும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டம் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, தி.மு.க. ஆட்சி வந்த பிறகும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம். மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியைதான் தமிழக அரசு செய்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்துக்கான முழுக்காரணமே தி.மு.க. என்பதுபோல் விளம்பரப்படுத்தப்படுகிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பே...

இதேபோன்று, உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கியவுடன், அங்குள்ள இந்திய மாணவர்களை மீட்க இரு நாட்டுத்தலைவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி பேசி அனைவரையும் பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வந்தார். ஆனால், டெல்லிக்கு தி.மு.க. சார்பில் 4 பேரை அனுப்பிவிட்டு, அவற்றை தி.மு.க. செய்ததாக விளம்பரம் செய்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தமிழகத்தின் கடன் நிலவரம், நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை இதையெல்லாம் தெரிந்து வைத்துதான் தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரித்தது. அதனை மக்களிடையே எடுத்துச் சென்று, அதன்மூலம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இப்போது வாக்குறுதிகளை பற்றி கேட்டால், தமிழகம் கடன் சுமையில் இருக்கிறது என்று அ.தி.மு.க. மீது பழி போடுகிறது தி.மு.க. அரசு.

தற்போது நிலக்கரி பிரச்சினையில் மத்திய அரசு மீது தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் உள்ள 2 அனல் மின் நிலையங்களில் 20 நாட்களுக்கு முன்பே உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும், இதற்கு காரணம் ஒடிசாவில் இருந்து நிலக்கரியை கப்பல் மூலம் எடுத்து வருவதில் ஏற்படும் தாமதம் என்றும் கூறப்பட்டது.

இதன் காரணமாகவும், தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதன் விளைவாக ஏற்பட்டுள்ள மின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாகவும் பல இடங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1 மணி நேரம், அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின் தடை ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன.

பிரச்சினை என்றதும் பழிபோடுவதா?

இந்தநிலையில் ‘தமிழகத்தின் மின் தேவை 17,300 மெகாவாட். இதற்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. ஆனால் மத்திய அரசு 48 ஆயிரம் டன் நிலக்கரியைதான் வழங்குகிறது. பற்றாக்குறையாக உள்ள நிலக்கரியை பெற ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு உள்ளது. நிலக்கரி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை செய்கிறது’, என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சொத்துவரி உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான் என்று அமைச்சர் கே.என்.நேரு எப்படி சொன்னாரோ, அதே பாணியில், மின் தடைக்கு காரணம் மத்திய அரசு என்பதை அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் மின் தடை ஏற்பட்டால் அதற்கு பொறுப்பு தி.மு.க. அரசுதான். மின் தடை ஏற்படாமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அதை எடுக்க வேண்டுமே தவிர, அதைவிடுத்து பிறர் மீது பழி போடுவதோ அல்லது அதற்கான காரணத்தை கூறுவதோ கண்டனத்துக்குரியது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தனிக்கவனம் செலுத்தி, மின் தடை ஏற்படாமல் அனைவருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்