நிலம் விற்பதாக கூறி பெண்களிடம் ரூ 32 லட்சம் மோசடி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

நிலம் விற்பதாக கூறி பெண்களிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-03-30 14:21 GMT
புதுச்சேரி
நிலம் விற்பதாக கூறி பெண்களிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.32 லட்சம் மோசடி

புதுச்சேரி காமராஜர் நகர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி கலைவாணி. இருவரும் தனித்தனியாக தொழில் செய்து வருகிறார்கள். இந்தநிலையில் உதயகுமாருக்கு பாப்பாஞ்சாவடி ஒட்டம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்த துளசிங்கம் என்பவரின் மகன் சிவபாலன் (வயது42) அறிமுகமானார்.
கடந்த ஆண்டு சிவபாலன் தொழிலில் ஏற்பட்ட கடன் காரணமாக கொம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான மனையை விற்பனை செய்து தரும்படி உதயகுமாரிடம் கூறினார். 
அதையடுத்து கலைவாணி, அவரது தோழிகளான கீதா, ராஜேஸ்வரி ஆகியோர் கூட்டாக இணைந்து சிவபாலனின் மனையை வாங்க திட்டமிட்டு சிவபாலனிடம் ரூ.32 லட்சத்தை கொடுத்ததாக தெரிகிறது. அதன்பின் அந்த இடம் சிவபாலனுக்கு சொந்தமானது இல்லை என்பது தெரிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கொலை மிரட்டல்

இதுகுறித்து சிவபாலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பணத்தை திரும்ப கொடுக்கும்படி கலைவாணி மற்றும் அவரது தோழிகள் கேட்டனர். அதற்கு சிவபாலன் பணத்தை திருப்பி தர மறுத்ததுடன் அவர்கள் 3 பேரின் குடும்பத்தையும் கூலிப்படை மூலம் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக பெரியகடை போலீசில் கலைவாணி அளித்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் சிவபாலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்