பா ஜ க கோட்டையாக மாறிய புதுச்சேரி வானதி சீனிவாசன் எம் எல் ஏ சொல்கிறார்

பா.ஜ.க. கோட்டையாக புதுச்சேரி மாறி வருகிறது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-03-25 17:55 GMT
புதுச்சேரி
பா.ஜ.க. கோட்டையாக புதுச்சேரி மாறி வருகிறது என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

விளக்க கூட்டம்

புதுச்சேரியில் பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய அரசின் பங்களிப்பு குறித்த விளக்க கூட்டம் கம்பன் கலையரங்கில்  நடந்தது. கூட்டத்திற்கு மாநில மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு, சிவசங்கரன், மகளிர் அணிசெயற்குழு உறுப்பினர் தாமரைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

பெண்களுக்கு முக்கியத்துவம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அனைத்து திட்டங்களும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. இதில் பெரும்பாலான திட்டங்கள் பெண்களின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாக இருக்கிறது. நாட்டில் அனைவரும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதில் 44 கோடி தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் 55 சதவீதம் பெண்கள் கணக்கு தொடங்கி உள்ளனர். 
சமையல் கியாஸ் வழங்கும் திட்டத்தில் 10 கோடி பெண்கள் பலன் அடைந்துள்ளனர். செல்வ மகள் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பயனாளிகள் இணைந்துள்ளனர். பா.ஜ.க.வில் மட்டும் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  

பா.ஜ.க. கோட்டை

காங்கிரஸ் ஆட்சியில் இருளில் மூழ்கி கிடந்த புதுச்சேரி பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழகத்திற்கு வழிகாட்டும் விதமாக புதுவை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் செயல்பட வேண்டும். புதுவை பா.ஜ.க. கோட்டையாக மாறி வருகிறது.
தாய் மொழி தாயை போன்றது. அதேபோல் மற்றொரு மொழியையும் படிக்க வேண்டும். அது நமக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பா.ஜ.க.வை சேர்ந்த தலைவர்கள் தமிழ் படிக்கிறார்கள். பிற மொழியை படிப்பது கடினம் தான். ஆர்வம் இருந்தால் தான் கற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கவர்னர் மாளிகை அருகே உள்ள பாரதியார் சிலைக்கு வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து ராஜா தியேட்டரில் இருந்து கம்பன் கலையரங்கத்திற்கு பா.ஜ.க.வினர் ஊர்வலமாக வந்தனர்.

மேலும் செய்திகள்