கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட வழக்கு 4 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கு தொடர்பாக 4 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-03-25 17:36 GMT
புதுச்சேரி
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கு தொடர்பாக 4 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கள்ள நோட்டு

புதுவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரான மோகன் கமல் என்பவரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கும்பலிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டுகளை வாங்கி வந்து புதுவையில் புழக்கத்தில் விட்டது அம்பலமானது.
இதையடுத்து கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்ததாக சென்னை எண்ணூரை சேர்ந்த பிரதீப்குமார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மோகன்கமல், பிரதீப்குமார் ஆகிய 2 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த ரகு (வயது 30), ராயபுரம் பகுதியை சேர்ந்த நாகூர் மீரான் (30), தமீன் அன்சாரி (28), பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த சரண்ராஜ் (30) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணை நடத்த திட்டம்

இதையடுத்து அவர்களை பிடிக்க கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஸ்வேதா உத்தரவின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சென்னை சென்று ரகு உள்பட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படும் நவீன எந்திரங்கள், ஜெராக்ஸ் மிஷின், கட்டிங் மிஷின், பச்சைகோடு வரையும் மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரகு உள்பட 4 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக வருகிற 28-ந் தேதி புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பரிந்துரை

இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. அல்லது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டும் என்று உருளையன்பேட்டை போலீசார் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர்சிங் கிருஷ்ணியா ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்