பாரதி பூங்கா மூடிக்கிடக்கும் அவலம் தண்ணீரின்றி கருகும் செடிகள்

ஊழியர்களின் போராட்டம் காரணமாக பாரதி பூங்கா மூடியே கிடக்கிறது. செடிகளும் தண்ணீரின்றி கருகி வருகின்றன.

Update: 2022-03-24 17:55 GMT
ஊழியர்களின் போராட்டம் காரணமாக பாரதி பூங்கா மூடியே கிடக்கிறது. செடிகளும் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
வருமானத்தை உயர்த்த...
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அரசே தங்களுக்கு நிதி ஒதுக்கி சம்பளம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி முதல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஊழியர்களின் போராட்டம் காரணமாக தற்போது கடந்த 4 நாட்களாக பாரதி பூங்கா மூடப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பெற்றோர்கள் மதிய வேளையில் தங்கள் குழந்தைகளை பாரதி பூங்காவிற்கு அழைத்து சென்று மதிய உணவை கொடுத்து மீண்டும் பள்ளிக்கு அனுப்புவார்கள்.
ஆனால் தற்போது அவர்களாக பாரதி பூங்காவிற்குள் செல்ல முடியவில்லை. இதனால் ஏதாவது கட்டிடத்தின் நிழலில் அமர்ந்து குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகின்றனர். நிழல் இருந்தாலும் வெயில் கடுமையாக இருப்பதால் வெப்பம் காரணமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வாடி வதங்கும் செடிகள்
கடந்த காலங்களில் பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடற்கரைக்கு 2 சக்கர வாகனங்களில் அழைத்து வந்து அங்குள்ள மர நிழல்களில் அமர்ந்து உணவு ஊட்டுவார்கள். ஆனால் தற்போது கடற்கரை சாலையையும் பாதுகாப்பு என்ற பெயரால் பூட்டி வைத்துள்ளனர். இதனால் பெற்றோர் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட கடற்கரை சாலை பக்கமே வருவதில்லை.
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பாரதி பூங்காவிற்கு செல்ல தவறுவதில்லை. தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் பூங்கா பூட்டி கிடப்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 
கடந்த 4 நாட்களாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றப்படாததால் கொளுத்தும் வெயில் காரணமாக செடிகள், மரங்கள் கருகி வருகின்றன. பாரதி பூங்கா முழுவதும் இலைச்சருகுகளாக காணப்படுகிறது. பூங்கா சுத்தம் செய்யாததால் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
பொதுமக்கள் அதிருப்தி
புதுவை அரசு துறைகளில் நடைபெறும் பல்வேறு போராட்டங்கள் பொதுமக்களுக்கு தொல்லை தருவதாகவே உள்ளது. சமீபத்தில் புதுவை அரசு சாலைப்போக்குவரத்து கழக ஊழியர்கள், பொதுமக்களுக்கு முறையாக தெரிவிக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை சம்பாதித்தனர்.
போராட்டங்களில் ஈடுபடும்போது, மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளையும் அரசு அதிகாரிகள் செய்வதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பணிகளை தனியாருக்கு கொடுத்துவிடலாம் என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழத்தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்