ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டிய பெண்ணால் பரபரப்பு

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம கேண்டீனுக்குள் நுழைந்த பெண் கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-24 17:51 GMT
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம கேண்டீனுக்குள் நுழைந்த பெண் கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கத்தியை காட்டி மிரட்டல்
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் உணவு விடுதி (கேண்டீன்) தலைமை தபால் நிலையம் அருகில் உள்ளது. இங்கு ஆசிரமத்தில் வசிப்பவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்படும். இந்த நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் கத்தியுடன் கேண்டீனுக்குள் நுழைந்தார்.
பின்னர் அவர் கத்தியை காட்டி அங்கிருந்த ஊழியர்களை மிரட்டினார். இதனால் பயந்து போன ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பெரியகடை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார், அந்த பெண்ணின் பின்னால் சென்று அவரை பிடித்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
மனநலம் பாதித்தவர்
விசாரணையில் அவர் வில்லியனூர் அருகே உள்ள உறுவையாறு பகுதியை சேர்ந்த விசாலாட்சி (வயது 40) என்பதும், மனநலம் பாதித்தவர் என்பதும், திருப்புராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.
மனநலம் பாதிக்கப்பட்டதால் அந்த பெண்ணை போலீசார் உறுவையாறில் உள்ள அவரது வீட்டில் விட்டனர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் விசாலாட்சியை கவனமாக பார்த்துக்கொள்ளும்படி அறிவுரை கூறினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்