அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது ‘அசானி’ புயல் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அந்தமான் கடல் பகுதியில் இன்று ‘அசானி’ என்ற புயல் உருவாகிறது. இதனால் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2022-03-20 23:12 GMT
சென்னை,

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மேலும் வலுப்பெற்றது.

தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று காலை) வடக்கு திசையில் அந்தமான்-நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடையும். அதன் பின்னர் அடுத்த 12 மணி நேரத்தில் (இன்று இரவு) புயலாக வலு பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு ‘அசானி’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

அந்தமானில் உஷார் நிலை

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான்-நிக்கோபர் தீவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், அப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சுற்றுலாத்தளங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே சுற்றுலாப்பயணிகள் வருகை காணப்படவில்லை.

‘அசானி’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அந்தமான்-நிக்கோபர் தீவு விரைந்தனர். தற்போதைய வானிலை செயற்கைக்கோள் நிலவரப்படி ‘அசானி’ புயல் வடக்கு-வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மியான்மரின் தென்கிழக்கு வங்காளதேச கடலில் 22-ந் தேதி (நாளை) கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் சீற்றம்; சூறாவளி காற்று

புயல் காரணமாக அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) மணிக்கு 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இடையிடையே மணிக்கு 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசும்.

நாளை (செவ்வாய்க்கிழமை) மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல், வடகிழக்கு வங்க கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும்.

மேலும் இப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருக்கும். எனவே இந்த கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தமிழகம், புதுச்சேரி உள்பட மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உள்பட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் ‘அசானி’ புயலால் தமிழகத்துக்கு எந்தவித அபாயமும், ஆபத்தும் இல்லை. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (திங்கட்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22-ந் தேதி (நாளை) முதல் 24-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் 3 செ.மீட்டரும், கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கரூர் மாவட்டம் மாயனூர், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா 2 செ.மீட்டரும், நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், கீழ் கோத்தகிரி எஸ்டேட் ஆகிய இடங்களில் ஒரு செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்