இரண்டு திருமணங்கள் செய்து ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவர் கைது...!
சென்னை அருகே 2 திருமணங்கள் செய்து கடந்த ஒரு வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போரூர்,
சென்னை ராமாபுரம் ராயலா நகர் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் 31 வயது மகள் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த அவரது பெற்றோர் கடந்த 2020-ம் ஆண்டு மகளின் விபரங்கள் அனைத்தையும் "ஆன்லைன் திருமண தகவல்" மையத்தில் பதிவு செய்தனர். இதை பார்த்து விருகம்பாக்கம் காந்தி நகர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த லோகநாத ரவிகுமார் என்பவரது பெற்றோர் தொடர்பு கொண்டு பேசினர்.
இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2020-ம் ஆண்டு விருகம்பாக்கம் பகுதியில் உள்ள கோவிலில் ஆசிரியைக்கு ரவிகுமாருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து சில நாட்களில் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற லோகநாத ரவிகுமார் பின்னர் ஒரு வாரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கணவரின் நடத்தையில் சந்தேகமடைந்த மனைவி அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது ரவிகுமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் குன்றத்தூரில் ரகசியமாக குடும்பம் நடத்தி வருவதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் "உன்னை கொலை செய்துவிடுவேன்" என்றும் மனைவிக்கு ரவிகுமார் மிரட்டல் விடுத்துள்ளார்
இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட ரவிகுமார் அதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் மீதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடபழனி அனைத்து மகளிர் போலீசாரிடம் ஆசிரியர் புகார் அளித்தார்.
வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் உத்தரவின் பேரில் ஏட்டு அசோக்குமார், ராஜ்மோகன், ஞானசேகர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து ரவிகுமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த ரவிகுமாரை தனிப்படை போலீசார் இன்று குன்றத்தூரில் வைத்து கைது செய்துள்ளனர்.