மதுரை மத்திய சிறை ஊழல் வழக்கு; மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல்
மதுரை மத்திய சிறையில் 100 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான புகழேந்தி, ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவரது மனுவில், மதுரை மத்திய சிறையில் கைதிகளால் தயாரிக்கப்பட்ட மருத்துவ பொருட்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை அரசு அலுவலகங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் அனுப்பப்பட்டதாக போலி கணக்கு காண்பிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை இந்த ஊழல் மூலமாக சுமார் 100 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதற்கான ஆதாரங்களை அவர் பெற்றதாகவும், பொருட்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு கைதிகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாக போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாகவும் அந்த மனுவில் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை டி.ஜி.பி.க்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் புகழேந்தி தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது போன்ற ஊழல் புகார்கள் தொடர்பாக குற்ற விசாரணை சட்டப்படி சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தான் விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்தனர்.
அதே சமயம் இந்த உத்தரவு, ஏற்கனவே உள்ள புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு எந்த ஒரு தடையாகவும் இருக்காது என நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.