தமிழகத்தில் மதுபானங்கள் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்வு: இன்று முதல் அமல்
மதுபானங்கள் விலை உயர்வு மூலம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10.35 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தி உள்ளது. அனைத்து வகையான மதுபானங்களும் குறைந்தது ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வு பட்டியலை அனைத்து மதுக்கடைகளுக்கும் மாவட்ட மேலாளர்கள் நேற்று இரவே அனுப்பினர். விலை உயர்த்தப்பட்ட மதுபான பட்டியலை கடையின் முன்பகுதியில் ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுபானங்கள் விலை உயர்வு இன்று (7-ந்தேதி) முதல் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய விலையில் மதுபானங்களை இன்றுமுதல் விற்பனை செய்ய அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சாதாரண ரக மது வகைகள் குவாட்டருக்கு ரூ.10-ம், நடுத்தர மற்றும் உயர் ரக மது பானங்களுக்கு ரூ.20-ம், சாதாரண ரக ஆப் பாட்டிலுக்கு ரூ.20-ம், நடுத்தர மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40-ம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாதாரண ரக முழு பாட்டிலுக்கு ரூ.40-ம், நடுத்தர மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகளுக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டதன் மூலம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10.35 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீர் விலை உயர்வின் மூலம் மட்டும் ஒரு நாளைக்கு ரூ.1.76 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.4,396 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் குறைந்த ரக மதுபானங்கள் அதிகளவு விற்பனையாகும். சாமானிய மக்கள் இந்த வகை மதுபானங்களையே வாங்கி அருந்துவது வழக்கம். இவற்றின் விலை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மானிட்டர் சாதாரண ரகம் கோல்டு ரம் முழு பாட்டிலின் விலை ரூ.480-ல் இருந்து ரூ.520 ஆக அதிகரித்துள்ளது. ஆப் பாட்டில் விலை ரூ.240-ல் இருந்து ரூ.260 ஆகவும், குவாட்டர் பாட்டில் விலை ரூ.120-ல் இருந்து ரூ.130 ஆகவும் உயர்ந்துள்ளது.
மானிட்டர் டீலக்ஸ் பிராந்தி முழு பாட்டில் ரூ.480-ல் இருந்து ரூ.520 ஆகவும், ஆப் பாட்டில் ரூ.260 ஆகவும், குவாட்டர் ரூ.130 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேபோல மானிட்டர் டீலக்ஸ் விஸ்கி விலையும் உயர்ந்துள்ளது.
காஸ்மோபாலிட்டன் மீடியம் விஸ்கி, ஓக்வாட் ரம், கார்டினல் கிரேப் பிராந்தி, கோல்டு மேக்கர் ஒயிட் ரம், அரிசோனா பிரீமியம் ஓட்கா, கார்டினல் நம்பர் ஒன் விஸ்கி ஆகியவற்றின் விலை முழு பாட்டில் ரூ.560-ல் இருந்து ரூ.640 ஆகவும், ஆப் பாட்டில் ரூ.320 ஆகவும், குவாட்டர் ரூ.160 ஆகவும் அதிகரித்துள்ளது.
கிளாசிக் கிராண்டி பிரீமியம் ரம் முழு பாட்டில் ரூ.720-ஆகவும், ஆப் பாட்டில் ரூ.360, குவாட்டர் ரூ.180 ஆகவும் அதிகரித்துள்ளது. வி.எஸ்.ஓ.பி. பிரீமியம் பிராந்தி முழு பாட்டில் விலை ரூ.760 ஆகவும், ஆப் பாட்டில் ரூ.380, குவாட்டர் ரூ.190 ஆக உயர்ந்துள்ளது.
கமாண்டோ சூப்பர் ஸ்ட்ராங் பீர் ரூ.120-ல் இருந்து ரூ.130 ஆகவும், மேக்ஸ் சூப்பர் ஸ்ட்ராங், ஐஸ் பெர்க்ஸ் மெகா ஸ்ட்ராங், மேக்ஸ்கூல் பிளாட்டினம் பிரீமியம் லெகர், ஹார்ஸ் பவர் சூப்பர் ஸ்ட்ராங் பீர் வகைகள் ரூ.130-ல் இருந்து ரூ.140 ஆக உயர்ந்துள்ளது.
புல்லட் சூப்பர் ஸ்ட்ராங் ரூ.120 ஆகவும், கிங் பிஷர் ஸ்ட்ராங் ரூ.140 ஆகவும், கிங் பிஷர் கிளாசிக் ரூ.150 ஆகவும், கிங் பிஷர் மேக்னம் ஸ்ட்ராங் ரூ.160 ஆகவும் உயர்ந்துள்ளது.
மதுபானங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று பகல் 12 மணிக்கு கடைகள் திறந்தவுடன் புதிய விலையில் மதுபானங்கள் விற்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் முணுமுணுத்துக் கொண்டே பாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
பிராந்தி, விஸ்கி, ரம், பீர் விலை உயர்ந்தபோதிலும் ஒயின் விலையில் மாற்றம் செய்யவில்லை என்று டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே விற்கக்கூடிய அதிகபட்ச விலையில் இருந்து கூடுதலாக விற்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய விலை உயர்வு இன்று நடைமுறைக்கு வந்துள்ளதால் மதுபானங்களின் இருப்புகளை சரியாக கணக்கெடுத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பும் படி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.