கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் பதவிகளை ராஜினாமா செய்யாத தி.மு.க.வினர் மீது நிச்சயம் நடவடிக்கை

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில், பதவிகளை ராஜினாமா செய்யாத தி.மு.க.வினர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-03-07 00:10 GMT
தூத்துக்குடி,

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா தூத்துக்குடியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, சிலையை திறந்துவைத்தார். கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருணாநிதி சிலையை திறந்துவைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கருணாநிதிக்கு சிலை

உள்ளாட்சி பொறுப்பிற்கு தேர்தல் நடைபெற்று, அதன் இறுதிக்கட்டமாக கடந்த 4-ந்தேதி அதனுடைய முடிவுகள் எல்லாம் அறிவிக்கப்பட்டு, முற்று பெறும் நிலையில் ஒரு மிகப்பெரிய வெற்றியை, சாதாரண வெற்றியல்ல, இதுவரையில் தி.மு.க. கண்டிராத வெற்றி. எனவே அப்படிப்பட்ட வெற்றியை பெற்றிருக்கும் நிலையில், அந்த வெற்றியை பெற்றதற்கு பிறகு என்னுடைய முதல் சுற்றுப்பயணம், முதல் நிகழ்ச்சியாக, இந்த தூத்துக்குடியில் உங்களை சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

இவ்வளவு பெரிய வெற்றியை காண்பதற்கு நம்முடைய தலைவர் கருணாநிதி இல்லையே என்ற ஏக்கம் என்னுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்திருந்தாலும், “இதோ தூத்துக்குடியில் மாவட்ட கழக அலுவலகத்திற்கு முன்பு நான் நிற்கிறேன் வாடா” என்று என்னை இங்கு அழைத்து, அதன் மூலமாக அவருடைய உருவச் சிலையை இன்றைக்கு உங்கள் அனைவரின் சார்பில் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

தொடர்ந்து கண்காணிப்பேன்

பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும், உள்ளாட்சியில் இன்றைக்கு மேயர்களாக, துணை மேயர்களாக, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக, பேரூராட்சித்தலைவர்களாக, துணைத்தலைவர்களாக, பேரூராட்சியில் உறுப்பினர்களாக, அதேபோல் ஊரகப்பகுதிகளில் இருக்கும் உள்ளாட்சி பொறுப்புகளிலும் பொறுப்பேற்றுள்ளவர்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், எங்காவது ஒரு சிறு தவறு நடந்தாலும் அதை நான் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்பேன்.

கண்காணித்துக்கொண்டு இருப்பேன் என்பது மட்டுமல்ல, உரிய நடவடிக்கையையும் உடனடியாக எடுப்பேன் என்பதையும் உறுதியோடு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். இது மிரட்டுவதற்காக, அச்சுறுத்துவதற்காக அல்ல, மக்கள் நம்மை நம்பி நம்மிடத்தில் இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார்களே, அவர்கள் நம்பிக்கையை நாம் காப்பாற்ற வேண்டும், அதற்காகத்தான்.

உரிய நடவடிக்கை

நீங்கள் கடந்த 2 நாட்களாக செய்திகளை பார்த்துகொண்டிருப்பீர்கள். நம்முடைய கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு சில இடங்களை ஒதுக்கி, அந்த இடத்தை அவர்களிடத்தில் ஒப்படைத்தோம். ஆனால் அந்த ஒரு சில இடங்களில் தவறுகள் நடந்தது. அந்த தவறுகள் நடந்த காரணத்தால் நான் வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், கூனிக்குறுகி நிற்கிறேன். எனவே அந்த தவறு செய்தவர்கள் உடனடியாக திருந்த வேண்டும், ராஜினாமா செய்துவிட்டு வரவேண்டும் இல்லை என்றால், கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நான் சொன்னது உங்கள் அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும்.

இது செய்திக்காக மட்டுமல்ல, ஏதோ அந்த கூட்டணி கட்சியில் இருப்பவர்களை திருப்திபடுத்துவதற்காகவோ அல்லது தவறு செய்தவர்களை மிரட்டுவதற்காகவோ அல்ல. நிச்சயமாக, உறுதியாக, அவர்கள் செய்த தவறை உணர்ந்து திருந்தவில்லை என்று சொன்னால் உரிய நடவடிக்கையை நிச்சயமாக நான் எடுப்பேன் என்பதை தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் நான் உறுதி எடுத்துகொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சுற்றுச்சூழல் சீரமைப்பு பூங்கா திறப்பு

முன்னதாக, விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படாத சுரங்கப்பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்பு பூங்காவை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எஸ்.தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர்.ரகுராமன், ஜி.அசோகன், தொழில் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ச.கிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெ.மேகநாத ரெட்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா, பி.வி. நிர்மலா, பி.வி. அபினவ் ராமசுப்பிரமணியராஜா, தலைமை செயல் அலுவலர் ஏ.வி. தர்மகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்