கொசு ஒழிப்பிற்கு சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி...!
தொழில்நுட்ப உதவியுடன் கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சென்னை,
கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகங்கள் சார்பில் கொசு மருந்து தெளிக்கவும், வீடுகளில், தெருக்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தொழில்நுட்ப உதவியுடன் கொசுக்களை ஒழிக்க சென்னை மாநகராட்சி புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி கொசு மருந்து தெளிக்கும் முறையை சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப்சிங் பேடி, சென்னை ராயபுரத்தில் இன்று தொடங்கி வைத்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏவியோனிக்ஸ் பிரிவு உதவியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி கூவம் நதி, பக்கிங்காம் கால்வாய், அடையாறு பகுதிகளிலும் ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தி மருந்து தெளிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீர் தேங்கிய பகுதிகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆவதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து, கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.