அ.தி.மு.க.வில் சசிகலாவை இணைக்க தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தல்
அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது. கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் இந்த தேர்தலில் அ.தி.மு.க. அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை செய்தார்.
அப்போது நிர்வாகிகள் சிலர், " சசிகலா, தினகரன் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். தமிழகத்தில் ஆட்சியை அ.தி.மு.க. தக்க வைத்திருக்கும். எனவே அவர்கள் இருவரையும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "அதற்கு காலம் தான் பதில் சொல்லும். காலம் கனியும். காத்திருங்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், "அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைப்பது, சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைப்பது குறித்து தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றிக் கொடுக்கிறோம். அதை வைத்து இந்த இணைப்பை சாத்தியப்படுத்த வேண்டும்" என்றனர்.
அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "அப்படி தீர்மானம் நிறைவேற்றிக் கொடுத்தால் அதை கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்கிறோம்" என்றார்.
இதையடுத்து மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நிர்வாகிகள் உடனடியாக ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் அ.தி.மு.க.-அ.ம.மு.க. இணைப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர் சையதுகானிடம் கேட்டபோது, "அ.தி.மு.க., அ.ம.மு.க. இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது தொடர்பாக எனது தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) தேனியில் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த தீர்மானம் குறித்து அறிவித்து, ஒப்புதல் பெற்று தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளோம்" என்றார்.
சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக பதிலளித்து பச்சைக்கொடி காட்டியது நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.