மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் பதவி : பதவியேற்ற கவுன்சிலர்கள் கடத்தல்...!
மயிலாடுதுறை நகராட்சியில் பதவியேற்ற கவுன்சிலர்கள் சொகுசு வாகனங்களில் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
மயிலாடுதுறை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் நடந்தது. அதன்படி மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் 19-வது வார்டு நகரசபை உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்ட அ.தி.மு.க.,வேட்பாளர் அன்னதாட்சி என்பவர் இறந்துபோனார். இதனை அடுத்து 19-ஆவது வார்டுக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மீதமுள்ள 35 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தன. தொடர்ந்து கடந்த 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தி.மு.க. சார்பில் 24 பேரும், அ.தி.மு.க. சார்பில் 7 பேரும், பா.ம.க., சார்பில் 2 பேரும், ம.தி.மு.க., காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும் வெற்றி பெற்றனர். அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 35 பேருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் நகரசபைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த பதவிகளைக் கைப்பற்ற தி.மு.க.விற்கு 2 அணிகளாக பிரிந்து தங்களுக்கு ஆதரவுகளை திரட்டி வருகின்றனர். இன்று பதவி ஏற்று வெளியே வந்த பெரும்பாலான தி.மு.க., நகர சபை உறுப்பினர்களையும், ஒருசில அ.தி.மு.க., நகரசபை உறுப்பினர்களையும் ஒரு பிரிவை சேர்ந்த தி.மு.க.வினர் தாங்கள் கொண்டுவந்த டெம்போ வேன்களில் அவசர அவசரமாக ஏற்றினர்.
அப்போது மற்றொரு பிரிவினர் தங்களுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. சில கவுன்சிலர்களின் கையை பிடித்து இழுக்காத குறையாக திமுகவினர் வேனில் ஏற்ற முயற்சித்தனர். ருப்பினும் அவர்கள் மறுத்து வெளியேறிசென்றனர். ஒரு சிலர் சொகுசு வாகனத்தில் ஏறி சுற்றுலா செல்வது போல் டாடா
காட்டிக் கொண்டு கையை அசைத்தபடி மகிழ்ச்சியாக சென்றனர்
இதனையடுத்து நகரசபை உறுப்பினர்கள் ஏறிய 2 ஏசி டெம்போ வேன்களும் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.