வீடு கட்டும் திட்டத்தில் ரூ.17½ லட்சம் முறைகேடு-15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
புதுக்கோட்டை அருகே வீடு கட்டும் திட்டத்தில் ரூ.17½ லட்சம் முறைகேடு செய்தது தொடர்பாக அரசு அதிகாரிகள் உள்பட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை,
ரூ.17½ லட்சம் முறைகேடு
ஏழை, எளிய மக்கள் வீடு கட்ட பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இதில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் சில பயனாளிகளுக்கு வீடு கட்டாமலே வீடு கட்டியதாகவும், அதற்கு கம்பி, சிமெண்டு மூட்டைகள் உள்ளிட்டவற்றிற்கு நிதி வழங்கப்பட்டதாக போலியாக ஆவணங்கள் தயாரித்துள்ளனர். மொத்தம் ரூ.17½ லட்சம் வரை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
15 பேர் மீது வழக்கு
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 15 பேர் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 15 பேர் மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் கேட்ட போது, ‘‘முறைகேடு நடந்தது தொடர்பாக தற்போது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் அடுத்த கட்டமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முறைகேடு நடந்த காலத்தில் பணியில் இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.