உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்; அதிர்ச்சியில் தாய் சாவு

உக்ரைனில் இருந்து நாடு திரும்ப முடியாமல் பேரணாம்பட்டு மாணவர் தவிக்கும் நிலையில் மனவேதனைக்கு ஆளான தாய் அதிர்ச்சியில் இறந்தார்.

Update: 2022-02-27 19:47 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகேவுள்ள கொத்தூர் ஊராட்சி பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரன். விவசாயி. இவரது மனைவி சசிகலா (வயது 53). இவர்களது இரண்டாவது மகன் சக்திவேல் உக்ரைனில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வருகிறார்.

தற்போது போர் தீவிரம் அடைந்துள்ளதால் ரஷிய குண்டு வீச்சில் பல இடங்கள் தீப்பற்றி எரிகின்றன. சக்திவேல் அங்கு சிக்கி தவிப்பதால் பேரணாம்பட்டில் உள்ள இவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தாய் சாவு

சக்திவேலின் தாயார் சசிகலா ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் தனது மகன் உக்ரைன் நாட்டில் போர் நடக்கும் பகுதியில் சிக்கியிருப்பதால் சசிகலா மிகவும் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சசிகலாவின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படவே அவர் திடீரென மயங்கி விழுந்தார்.அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சசிகலா இறந்த தகவல் அவரது மகன் சக்திவேலுக்கு வீடியோ கால் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கதறல்

இறந்த தாய்க்கு இறுதி சடங்கு செய்ய நாடு திரும்ப முடியாமல் தவித்து, தாயின் உடலை வீடியோ காலில் பார்த்து சக்திவேல் கதறினார். இந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே தாயை இழந்து தவிக்கும் சக்திவேலுவுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக அவரை உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீருடன் கூறி வருகின்றனர்.

மேலும் செய்திகள்