தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
கூரியர் நிறுவன ஊழியர் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியபோது தண்டவாளத்தில் கால் சிக்கி முறிந்தது.
கூரியர் நிறுவன ஊழியர் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியபோது தண்டவாளத்தில் கால் சிக்கி முறிந்தது.
கூரியர் நிறுவன ஊழியர்
வில்லியனூரை அடுத்த அரும்பார்த்தபுரம் புதுநகரை சேர்ந்தவர் சீனிவாசன் என்ற மூர்த்தி (வயது 31). புதுச்சேரியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 21-ந்தேதி இரவு அரும்பார்த்தபுரம் பகுதியில் உள்ள சாராய கடைக்கு சாராயம் வாங்க சென்றார்.
அப்போது அங்கு வந்த சேந்தநத்தம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் (25), புகழ் என்ற புகழேசன் (24) ஆகியோர் சீனிவாசனை நைசாக பேசி அங்குள்ள சுடுகாடு பகுதிக்கு அழைத்து சென்று சாராயம் குடித்தனர்.
குத்திக்கொலை
அப்போது ஏற்பட்ட தகராறில் சாராய பாட்டிலை உடைத்து சீனிவாசனை குத்திக்கொலை செய்து விட்டு அவர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த புகழை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் புகழ் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு முட்புதர்கள், மரங்கள் அதிகளவில் இருப்பதால் டிரோன் மூலம் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கால் முறிந்தது
இந்தநிலையில் நேற்று இரவு புகழ் தனது வீட்டுக்கு வர ஆற்றை கடந்து, மூர்த்திநகர் பகுதி ரெயில்வே கேட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடிக்க முயன்றனர்.
போலீசாரை கண்டதும் தப்பி ஓடியபோது அங்குள்ள தண்டவாளத்தில் புகழின் கால் சிக்கியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இருப்பினும் தண்டவாளத்தில் சிக்கியதில் புகழின் கால் முறிந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு போலீஸ் காவலில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.