தட்டுவண்டியில் செல்லும் மாணவர்கள்
சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் தட்டுவண்டியில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் தட்டுவண்டியில் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்
புதுவையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு எளிதில் சென்று வர கடந்த காலங்களில் மாணவர் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் ஒரு ரூபாய் கட்டணத்தில் புதுவையில் எங்கு ஏறி எங்கு வேண்டுமானாலும் மாணவர்கள் இறங்கிக்கொள்ளலாம்.
முழுக்க முழுக்க மாணவர்களுக்காக மட்டுமே இந்த பஸ் இயக்கப்பட்டது. கிராமப்புறத்தில் இருந்து நகரப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதுமட்டுமின்றி நகரப்பகுதியில் உள்ள மாணவர்களும் தங்கள் பகுதியில் இருந்து தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு இந்த பஸ்களை பயன்படுத்தி சென்று வந்தனர்.
ஏழை மாணவர்கள்
ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் மாணவர் சிறப்பு பஸ்கள் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நாளொன்றுக்கு ரூ.30 வரை செலவு செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிலும் லாஸ்பேட்டையில் உள்ள பள்ளிகளில் படித்தால் இன்னும் கூடுதல் செலவாகி வருகிறது.
அதுமட்டுமின்றி பஸ்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் படிக்கட்டுகளிலும், பஸ்சின் பின்பக்க ஏணியிலும் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர். இதில் ஏழை மாணவர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
தட்டுவண்டி பயணம்
சில மாணவர்கள் நடந்தும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கருணை உள்ளம் கொண்டவர்கள் தட்டுவண்டிகளிலும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்று விடுகின்றனர்.
மாணவர்களின் நலன்கருதி உடனடியாக மாணவர் சிறப்பு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.