சென்னை விமான நிலையத்தில் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு ‘ரேபிட் பி.சி.ஆர்.’ பரிசோதனை நிறுத்தம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு ரேபிட் பி.சி.ஆர். பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு ஆர்.பி.பி.சி.ஆர். எனப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் அதன் முடிவுகள் வர தாமதமானதால், 45 நிமிடங்களில் முடிவு தெரியக்கூடிய ‘ரேபிட் பி.சி.ஆர்.’ மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் சிலருக்கு பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ‘நெகடிவ்’ என வந்திருந்தாலும், விமான நிலையத்தில் செய்யப்படும் ‘ரேபிட் பி.சி.ஆர்’ பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என வந்ததாகவும், இதன் காரணமாக பலர் தங்கள் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் சென்னை விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு அமீரகம், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘ரேபிட் பி.சி.ஆர்.’ பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் பிற நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு சதவீத அடிப்படையில் ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ பரிசோதனை கட்டாயம் என்பதால், அங்குள்ள பரிசோதனை மையம் தொடர்ந்து இயங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.