நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மறு வாக்குப்பதிவு 10 மணி நிலவரம்

திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17-ல் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறும் மறு தேர்தலில் காலை 10 மணி வரை 31% வாக்குப்பதிவாகி உள்ளது.

Update: 2022-02-21 05:07 GMT
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. தேர்தல் அமைதியாக நடந்தது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறினாலும், சென்னை உள்பட சில இடங்களில் கள்ள ஓட்டு தொடர்பான புகார்களால் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குச்சாவடிக்குள் புகுந்து குடிபோதையில் வாக்குப்பதிவு எந்திரம் உடைப்பு, வாக்குப்பதிவு எந்திரம் பழுது உள்ளிட்ட இடையூறுகள், பிரச்சினைகளும் நடந்தன. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளான சென்னை, மதுரை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, சென்னை மாநகராட்சி 51-வது வார்டில் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடி (எண் 1174), 179-வது வார்டில் அமைந்துள்ள பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி (எண் 5059), மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 17 டபிள்யூ), அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி 16-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 16 எம், 16 டபிள்யூ), திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி (எண் 57 எம், 57 டபிள்யூ) என 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது. கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். 

மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில்,  ஜெயங்கொண்டம் வார்டு எண் 16-ல் 2 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 9 % வாக்குப்பதிவாகி உள்ளது.

திருவண்ணாமலை வார்டு 25 -ல் 2 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு தேர்தலில் காலை 9 மணி வரை 16.35% வாக்குகள் பதிவாகி உள்ளது.

தொடர்ந்து 10 மணி நிலவரப்படி,

* அரியலூர் ஜெயங்கொண்டம் வார்டு எண் 16-ல் 2 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வரும் மறு தேர்தலில் காலை 10 மணி வரை 18% வாக்குகள் பதிவாகி உள்ளது.

*  மதுரை திருமங்கலம் நகராட்சி வார்டு எண் 17-ல் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறும் மறு தேர்தலில் காலை 10 மணி வரை 31% வாக்குப்பதிவாகி உள்ளது.

*  திருவண்ணாமலையில் காலை 10 மணி நிலவரப்படி 28.05% வாக்குகள் பதிவாகி உள்ளன.

*  சென்னை பெசன் ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வது வாக்குச்சாவடியில் 10 மணி நிலவரப்படி 196 வாக்குக்கள் பதிவாகி  உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்