கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலி

கண்டமங்கலம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலியானார்.

Update: 2022-02-17 18:13 GMT
கண்டமங்கலம் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலியானார்.
சிலிண்டர் வெடித்தது
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிபுதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மலர் (வயது 50). இவர் தனது மகள் வழி பேத்திகளுக்கு கடந்த வாரம் காதணி விழா நடத்தினார். 
இதில் கலந்துகொள்ள மலரின் அக்காள் லட்சுமி (60) வந்திருந்தார். விழா முடிந்ததும் அனைவரும் சென்று விட்டனர். தனது தங்கையுடன் லட்சுமி இங்கேயே இருந்து விட்டார். 
இந்தநிலையில் இன்று அருகில் உள்ள கழிப்பறைக்கு மலர் குளிக்கச் சென்றார். வீட்டில் இருந்த லட்சுமி டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. சற்று நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. 
பரிதாப சாவு
இதனால் வீடு முழுவதும் தீ பரவி பற்றி எரிந்தது. லட்சுமி மீது தீப்பற்றியதால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதற்கிடையே தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய லட்சுமியும் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக வந்து இருந்த இடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி பலியான சம்பவம் அங்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்