நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சென்னையில் கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படைகள் அமைப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னையில் கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ந்தேதி) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டது. பணம், பொருட்களை பறிமுதல் செய்யும் போது வீடியோ எடுத்து உடனுக்குடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பணம் மற்றும் பரிசு பொருட்களை தடுப்பதற்காக கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ககன்தீப் சிங் பேடி கூறுகையில்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சென்னையில் கூடுதலாக 45 தேர்தல் பறக்கும் படை குழுக்களை மாநில தேர்தல் ஆணையம் அமைத்ததுள்ளது. சென்னையில் 90 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. பணம், பரிசுப் பொருட்கள் விநியோகம் குறித்து புகார் அளிக்கலாம், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் இதுவரை ரூ.1.45 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 13 ஆயிரம் இடங்களில் பிரசார போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. சுவரொட்டி ஒட்டினால் சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறினார்.