நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் இயங்கின

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கின. விற்பனை மந்தமாக இருந்தபோதிலும் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-02-17 01:41 GMT
சென்னை,

தமிழகத்தில், கொரோனா பரவல் குறைந்து வந்ததையடுத்து கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஏகப்பட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டன.

நேற்று முதல் நர்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதுடன். உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் நேற்று முதல் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டது.

இது தவிர, துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், தனியாக உள்ள உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றிலும் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதே போன்று, அனைத்து தியேட்டர்களிலும் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், உள் விளையாட்டு அரங்குகள், அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள், அழகு நிலையங்கள், சலூன்கள், அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களுக்கும் முழுவதுமாக அனுமதி வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து, நேற்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் நீண்ட நாட்களுக்கு பிறகு 100 சதவீத இருக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்களும், மகிழ்ச்சியுடன் அனைத்து இருக்கைகளிலும் அமர்ந்து எந்தவித நெருடலும், பயமும் இன்றி இயல்பாக உணவருந்தினர். இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து மக்கள் முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கிவிட்டதை போல் உணர முடிந்தது.

இருந்தபோதிலும், சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள உணவகங்களில் கொரோனா தொற்று தொடங்குவதற்கு முந்தைய கூட்டமோ, வியாபாரமோ காணப்படவில்லை. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த உணவகத்தின் மேலாளர் ரமேஷ் என்பவர் கூறும்போது, ‘‘இதுவரை 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது வந்து ஓட்டலை ஆய்வு செய்து வந்தனார். இது எங்களுக்கு சற்று இடையூறாக இருந்து வந்தது. தற்போது ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படாததாலும், பயணிகள் ரெயில்கள் முழுமையாக இயக்கப்படாததாலும் எங்கள் கடைகளில் கூட்டம் குறைவாக உள்ளது. இதனால், விற்பனை மந்தமாக இருந்தாலும், தற்போது 100 சதவீத இருக்ககைளுக்கு அனுமதி அளித்தது மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது’’ என்றார்.

இதே போன்று, தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த போதிலும், சென்னை அண்ணாசாலையில் உள்ள தியேட்டர் ஒன்றில் குறைந்தபட்ச இருக்கைகள் (25 சீட்டுகள்) நிரம்பாததால் காலை காட்சி ரத்து செய்யப்பட்டு இருந்ததை பார்க்க முடிந்தது. எனினும், அவர்களும் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியாகவே இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகி ஸ்ரீதர் கூறியதாவது:-

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கு நன்றி. கடந்த சில நாட்களாகவே திரையரங்குக்கு ரசிகர்கள் வருகை குறைவாகவே உள்ளது. பெரிய பட்ஜெட் படங்கள் வராததால் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், கடந்த 13-ந் தேதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடிக் கிடக்கின்றன.

அஜித்குமாரின் ‘வலிமை' படம் திரைக்கு வந்த பிறகே, தியேட்டர்களில் அதிக கூட்டம் வந்து 100 சதவீத இருக்கைகள் நிரம்பும் என்று எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் ஆர்.ஆர்.ஆர்., ராதே ஷியாம், கே.ஜி.எப்.-2, விக்ரம், டான், பீஸ்ட் ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருப்பதால், ரசிகர்கள் வருகை அதிகரிக்கும். திரையரங்குகள் மீண்டும் புத்துயிர் பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களும் நேற்று 100 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கின. மொத்தத்தில் தமிழகத்தில் கொரோனா பயம் நீங்கி மக்கள் முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பது போன்ற நிலையை உணர முடிந்தது.

மேலும் செய்திகள்