மாசி திருவிழா தேரோட்டம் - பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தென்காசி காசி விஸ்வநாதர்

காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-02-16 11:39 GMT
தென்காசி

பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெற்று வருகின்றன. ஏராளமான பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி -அம்பாள் காலை 6 மணிக்கு தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பின்னர் காலை 9-30 மணிக்கு சுவாமி தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க, பக்தர்களின் பக்தி கோஷத்துடன் தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10-35 மணிக்கு நிலையத்தை அடைந்தது. 

இதன்பிறகு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்த தேரும் 4 ரத வீதிகளிலும் சுற்றி 10-45 மணிக்கு நிலையத்தை அடைந்தது. தேர்கள் நிலையத்தை அடைந்ததும் பக்தர்கள் கரவொலி எழுப்பி பக்தி கோஷமிட்டனர்.

விழாவில் கோவில் தக்கார் சங்கர், உதவி ஆணையர் கோமதி, நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செந்தில்குமார், கோவில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் பயிற்சி சூப்பிரண்டு கிருஷ் யாதவ், துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்