பள்ளிக்கூடத்திற்கு உள்ளே ‘ஹிஜாப்' அணிந்து செல்லக்கூடாது - நடிகை குஷ்பு பேட்டி

பள்ளிக்கூடத்திற்கு உள்ளே போகும் போது ‘ஹிஜாப்' அணிந்து செல்லக்கூடாது என்று நடிகை குஷ்பு தெரிவித்து உள்ளார்.

Update: 2022-02-12 00:32 GMT
சென்னை,

பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் நடிகை குஷ்பு சென்னை கோடம்பாக்கம் பகுதியில் நகர்ப்புற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது, நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

‘ஹிஜாப்' அணிவதும், அணியாததும் அவரவர் தனிப்பட்ட உரிமை. என்னை பொறுத்தவரையில் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் போது அங்கு சீருடை என்று ஒன்று இருக்கிறது. எனவே, பள்ளிக்கூடத்திற்கு உள்ளே ‘ஹிஜாப்' அணிந்து செல்லக்கூடாது. பள்ளிக்கூட வாசல் வரை ‘ஹிஜாப்' அணிந்து செல்லுங்கள். பள்ளிக்கூடத்துக்கு உள்ளே போகும்போது எந்த மதத்தையோ, சாதியையோ உள்ளே கொண்டு போகாமல் இந்த நாட்டில் இருக்கிற குழந்தைகள் மாதிரி பள்ளிக்கூடத்தில் இருக்கிற சட்டவிதிகளின்படி சீருடை அணிந்துதான் பள்ளிக்கூடத்திற்குள் செல்ல வேண்டும்.

நானும் முஸ்லிம் தான். எனது குழந்தைகள், நான், எனது தோழிகள் யாருமே பள்ளிக்கூடத்திற்குள் ‘ஹிஜாப்' அணிந்து சென்றது இல்லை. பள்ளிக்கூட வாசல் வரை ‘ஹிஜாப்’ அணிந்து வருவோம். அதன்பிறகு பள்ளிக்கூடத்திற்குள் போகும்போது சீருடையில் தான் செல்வோம்.

பெங்களூருவில் நாங்கள் கூறியது என்ன? பள்ளிக்கூடத்திற்குள் வரும்போது ‘ஹிஜாப்' அணிந்து வராதீர்கள் என்று சொல்கிறோமே தவிர, பள்ளிக்கூடத்திற்கே வராதீர்கள் என்று கூறவில்லை. யாரும் காவித்துண்டு போட்டுக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாங்கள் ‘ஹிஜாப்' அணிந்துதான் பள்ளிக்கூடத்திற்குள் வருவோம் என்று அடம் பிடிக்கும் போதுதான் சில குழந்தைகள் காவித்துண்டு போட்டுக்கொண்டு உள்ளே சென்று இருக்கிறார்கள். இரண்டுமே தப்பு தான்.

‘ஹிஜாப்', காவித்துண்டு அணிந்து கொண்டு பள்ளிக்கூடத்துக்கு போகக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறுகிறது. அதைத் தாண்டிதான் இவர்கள் வருவார்களா? ஒவ்வொரு பள்ளியின் அடையாளத்தை காட்டுவதற்காக சீருடை இருக்கிறது. அதை அணிந்துதான் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்