தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் 14-ந் தேதி விசாரணை
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பான, மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 14-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது. இது தொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் சார்பில் வக்கீல் ஏ.லட்சுமிநாராயணன், வக்கீல் எஸ்.பிரசன்னா தூய இருதய அன்னை சபை தலைமை சகோதரி ரொசாரி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சி.பி.ஐ.க்கு மாற்றிய மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் வக்கீல் எஸ்.ஜோசப் அரிஸ்டாட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். அதில், மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு தவறானது, இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அந்த மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்து வக்கீல் எஸ்.ஜோசப் அரிஸ்டாட்டில் கடந்த 7-ந் தேதி மனுதாக்கல் செய்தார்.
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு பிப்ரவரி 14-ந் தேதி விசாரிக்கிறது.