கருவேல மரங்களை அகற்றுவது குறித்து 2 வாரங்களில் அறிக்கை - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுவது குறித்த திட்ட அறிக்கையை 2 வாரங்களில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், அது தொடர்பான பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த வழக்குகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், சீமைக்கருவேல மரங்களை அறிவியல் ரீதியாக அகற்றுவதற்காக நிபுணர்கள் குழுவின் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அவை கிடைத்த பின்னர் முழுமையாக அகற்றுவது தொடர்பாக திட்டம் வகுக்க 6 மாத காலம் அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுக்க நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை பாதிப்பது மட்டுமல்ல, நிலத்தையும் மலடாக்கி விடுகிறது என்பதால் அவற்றை வெறுமனே வெட்டுவது மட்டுமல்லாமல் வேறோடு அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். குழுக்கள் மேல் குழுக்கள் அமைத்து அறிக்கை கேட்பதால் எந்த பயனும் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், 2 வாரங்களில் திட்டம் வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.