மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை அரசு அதிகாரிகள் இதுவரை பார்வையிடாதது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை அரசு அதிகாரிகள் இதுவரை பார்வையிடாதது ஏன் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2022-01-03 03:48 GMT
சென்னை,

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை தமிழக அரசின்  அமைச்சர்களோ,  அதிகாரிகளோ இதுவரை பார்வையிடாதது ஏன்? கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அப்போது அமைக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் குழு என்ன ஆயிற்று?

அவர்கள் அறிக்கை அளித்தார்களா?அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?இப்போது நெற்கதிர் முற்றி வரும் நேரத்தில் டெல்டா பகுதியில் பெய்த திடீர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாழாகி  இருக்கின்றனவே,இதற்காவது தமிழக அரசு ஏதாவது செய்யுமா? 

மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து தேவையான இழப்பீட்டை பெற்றிடுமா? இல்லை; பெயரளவுக்கு "நான்  டெல்டாவைச் சேர்ந்தவன்" என்று சொல்லியே முதலமைச்சர் திரு. ஸ்டாலின் காவிரி பாசன  விவசாயிகளை வழக்கம்போல ஏமாற்றப் போகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்